தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையில் கொஞ்ச நாட்கள் அடங்கிக்கிடந்த வார்த்தை யுத்தம் மீண்டும் வலுக்க ஆரம்பித்திருக்கிறது.
தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற நாள் முதலே மரபுகளை மீறி செயல்படுவதாக ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துவருகிறது திமுக. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை அனுப்பி வைத்ததில் பாஜகவுக்கு உள்நோக்கம் இருப்பதாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் குரலெழுப்புகின்றன.
2021-22 காலகட்டத்தில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட 19 மசோதாக்களை காரணமே சொல்லாமல் கிடப்பில் வைத்திருந்தார் ஆளுநர். ஒரு கட்டத்தில் நெருக்கடிகள் அதிகமானதும், ”காரணமே சொல்லாமல் கிடப்பில் வைத்திருந்தால் அந்த மசோதா நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்” என திருவாய் மலர்ந்தார் ஆளுநர். இது திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் இன்னும் கொதிப்பாக்கியது.
இந்த கொதிப்புகள் அடங்குவதற்குள், தமிழகம், தமிழ்நாடு சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர், கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆளும் கட்சிகள் பிற்போக்குதனமாக இருப்பதாக கொளுத்திப்போட்டார். அவரின் இந்தப் பேச்சுக்கு பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் எதிர்ப்புத் தெரிவித்தது.
ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, “தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து, நாள் தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்களையும் செய்து கொண்டிருப்பவர்தான் ஆளுநர் ரவி. எங்கு சென்றாலும், சனாதானம், ஆரியம், திராவிடம், காலினி ஆதிக்கம், திருக்குறள் உள்ளிட்டவை குறித்து அபத்தமான கருத்துகளை முன்வைக்கிறார். வகுப்புவாத பிரிவினை அரசியலை பேசி மீண்டும் வர்ணாசிரம காலத்திற்கு இட்டு செல்வதுதான அவரது நோக்கமாக இருக்கிறது” என்று சீறினார்.
மேலும், “இவருக்குத் தமிழக பாஜக தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இதுபோன்ற அபத்தங்களைப் பேசட்டும். நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல். சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த ஆளுநரின் கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்எஸ்எஸ் வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது” என்றும் கடுமைகாட்டி இருந்தார் பாலு.
ஆனாலும் இதற்கெல்லாம் சளைக்காத ஆளுநர், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் தனது இஷ்டத்துக்கு திருத்தங்களைச் செய்து வாசித்தார். இதனால், அவர் அவையில் இருக்கும் போதே அவரைக் கண்டித்து தீர்மானம் போடுமளவுக்கு பிரளயமானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த சமயத்தில் அவையில் தேசிய கீதம் இசைக்கப்படும் போதே அவசரமாக வெளியேறி சர்ச்சைக்கு ஆளானார் ஆளுநர்.
இதேபோல், சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில், குழந்தைகளுக்கு இரு விரல் சோதனை நடத்தியதாக தமிழக அரசு மீது புகார் எழுப்பிய ஆளுநர், “அங்கு குழந்தை திருமணம் நடக்கவில்லை” என்றும் கூறினார். ஆனால் அது உண்மை இல்லை என்பது போல், சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், உதகையில் அண்மையில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாட்டில் பேசிய ஆளுநர், “வெளிநாடுகளுக்குச் சென்று தொழிலதிபர்களை நேரில் சந்தித்து பேசுவதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது. உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். முதலீடுகளை ஈர்க்கத் தேவையான திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை பெருக்குவதே சிறந்த வழி” என்று அடுத்த அணுகுண்டை எடுத்து வீசினார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க அண்மையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக சீண்டும் விதமாகவே ஆளுநர் இப்படிப் பேசியிருக்கிறார் என திமுக தரப்பு மீண்டும் சூடானது.
ஆளுநரின் பேச்சுக்கு உடனடியாக ரியாக்ஷன் காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”ஆளுநர் சமீப காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். இதற்கு அவரது அண்மைக்கால பேச்சுக்களே சாட்சி. மத்திய அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் உள்ள 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் 22 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 30 தமிழகத்தில் உள்ளவை.
மற்ற மாநிலங்களை விட தமிழக கல்வி கட்டமைப்பு சிறப்பாக இருப்பதை மறைத்து ஆளுநர் எப்படி பேசுகிறார் எனத் தெரியவில்லை. முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து ஆளுநர் கொச்சைப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது முதலீடுகளை ஈர்க்க பல நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரதமரை நோக்கி ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளதாகவே கருதுகிறேன்” என்றார்.
ஆளுநரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய முதல்வரும், “கல்வியில், மக்கள் நலன் காப்பதில் தமிழகம் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், நம் மாநிலத்தின் வளர்ச்சி மாநிலத்திலே மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு புலப்படவில்லை. அவர் தொடர்ந்து இப்படிச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாக புரிந்து கொள்வார்கள்” என்றார்.
கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்க போதுக்கூட்டத்திலும் ஆளுநரை ஒரு பிடி பிடித்த முதல்வர், “தமிழகத்தில் ஆளுநராக இருப்பவர் செய்யும் சித்து விளையாட்டுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொருத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியுடன் புறப்பட்டுள்ளோம். ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசட்டும். மக்கள் நம்முடன் இருக்கின்றனர்” என்றார்.
இந்த விவகாரத்தில் துணைக்கு வந்த முரசொலி நாளேடும், 'சட்டப் பேரவையை விட்டு கருத்த முகத்தோடு ஓட்டமும் நடையும் என்பார்களே... அதுபோல வெளியேறிய நிகழ்ச்சிகளை எல்லாம் அடிக்கடி ஆளுநர் ரவி மறந்துவிடுகிறார். ஒருமுறை சூடுபட்ட பூனைகூட மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கும். ஆனால் ரவி, தான் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர்க்கும் காரியங்களில் ஈடுபடாது எப்போதும் சிறு பிள்ளைத்தனத்தோடு செயல்பட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகிறார்!
ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால், தனது பதவியைத் துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தின் பாஜக தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாகச் செயல்பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதியைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது’ என தன் பங்கிற்குச் சாடியது.
வழக்கமாக ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்குத்தான் பதில் சொல்லிக் களைப்பார்கள். ஆனால், தமிழகத்தில் இப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைவிட ஆளுநர் எடுத்து வீசும் அம்புகளைச் சமாளிப்பது தான் ஆளும் திமுக அரசுக்குப் பெரும் சவாலாய் இருக்கிறது. ஒத்தைக்கு ஒத்தை போட்டுப் பார்க்கலாமா என்று கேட்காத குறையாக நடக்கும் இந்த ஆளுநர் - ஆளும்கட்சி மோதல் எங்குபோய் முடியுமோ?