கொல்கத்தா பெண் மருத்துவரின் பெயர், படங்கள் இடம்பெற்ற செய்திகள், வீடியோக்களை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் பெயர், அவரது படங்கள் இடம்பெற்ற செய்திகள், வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொல்கத்தா கொடூரத்தில் உயிரிழந்தவரின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடுவதற்கு எதிராக இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யத மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அப்போது, இறந்தவரின் உடலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது உச்ச நீதிமன்றத்தின் நிபுன் சக்சேனா தீர்ப்புக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதனை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, இறந்தவரின் உடலின் படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இறந்தவரின் பெயர், புகைப்படங்கள் அடங்கிய வீடியோ காட்சிகள், செய்திகளை அனைத்து செய்தித் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து இது குறித்து பாரதிய நியாய சன்ஹிதா என்ன கூறுகிறது என்று மனுதாரிடம் நீதிபதிகள் அமர்வு கேட்டது. அதற்கு அடையாளங்களை வெளியிடக் கூடாது என்று அவர்கள் பதில் அளித்தனர்.

‘மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பணிக்குழு’ - முன்னதாக, கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது ஓர் அடிப்படையான பிரச்சினை என்று தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்து வரும் சிபிஐ வரும் வியாழக்கிழமை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, நாடு முழுவதும் பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ள பணிக்குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.

x