ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரிக்டரில் 4.9 ஆக பதிவு


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் தாக்கியதால் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது என்றாலும் இதுவரை உயிர் சேதமோ, பொருள்கள் சேதமோ பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் காலை 6.45 மணிக்கு ஏற்பட்டது. இது அட்ச ரேகைக்கு 34.17 வடக்கில் மற்றும் தீர்க்க ரேகை 74.16 கிழக்கில் பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் வடக்கு காஷ்மீரில் பாராமுல்லாவில் மையம் கொண்டிருந்தது.

இரண்டாவது நிலநடுக்கம் அதே பாராமுல்லாவில் காலை 6.52 மணி்க்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம், அட்ச ரேகை 34.20 வடக்கில், தீர்க்க ரேகை 74.31 கிழக்கில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது" என்றனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிர் சேதமோ, பொருள்கள் சேதமோ இதுவரை பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் நிலவியல்ரீதியாக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியிலேய அமைந்திருக்கிறது. கடந்த 2005, அக்.8ம் தேதி ரிக்டரில் 7.6 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x