ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம் - பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் அதிகாரி வீரமரணம்


ஜம்மு காஷ்மீர்: உதம்பூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் உள்ளூர் காவல்துறையினரும், மத்திய காவல் ஆயுதப் படையினரும் கூட்டாக இணைந்து ஈடுபட்டிருந்தனர். அப்போது பசந்த்கரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் மீது, பிற்பகல் 3.30 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

தற்போது அப்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

காஷ்மீருடன் ஒப்பிடும்போது பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஜம்மு பகுதியில் இன்றைய தாக்குதல் நடந்துள்ளது. ஜம்முவில், குறிப்பாக பீர் பஞ்சால் மலைத்தொடரின் தெற்குப் பகுதிகளில், பயங்கரவாதிகள் மறைவாக இருக்கும் அடர்ந்த காடுகள் மற்றும் செங்குத்தான மலைகள் உள்ளன. அங்கே தற்போது தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன

முன்னதாக ஆகஸ்ட் 14 அன்று, ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடந்த என்கவுன்டரில், கேப்டன் தீபக் சிங் என்ற ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் உயிர்நாடியான நெடுஞ்சாலைகளை பயங்கரவாதிகள் குறிவைக்கலாம் என சமீபத்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ரோந்து செல்ல உள்ளூர் போலீசாருடன் சிஆர்பிஎஃப்-ல் இருந்து அதிக துருப்புக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 10 அன்று, அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜூலை 21 வரை 11 பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் மற்றும் 24 பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x