அடுத்த அதிர்ச்சி - ஜம்மு காஷ்மீர் மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு துன்புறுத்தல்!


ஜம்மு காஷ்மீர்: ரஜோரி மாவட்டத்தில் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் ரகளை செய்து, துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேராவில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு குர்பிரீத் சிங் என்பவர் ஒரு நோயாளியுடன் ஞாயிறு நள்ளிரவு 12.45 மணியளவில் வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டு சலசலப்பை உருவாக்கியுள்ளார். இதனால் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து குர்பிரீத் சிங் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மருத்துவமனையை சேதப்படுத்தியுள்ளார். மேலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு பெண் மருத்துவர் ஒருவருக்கு துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இந்த சலசலப்பைத் தொடர்ந்து, மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் தங்கள் பணியை புறக்கணித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவமனை வளாகத்தில் போதிய பாதுகாப்பு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குர்பிரீத் சிங்கைக் கைது செய்தனர்.

போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ததை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சலசலப்பை உருவாக்கியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள இச்சம்பவம் அடுத்த அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

x