நிலக்கரி சுரங்க அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை: ரூ. 3.8 கோடி ரொக்கம் பறிமுதல் @ மத்திய பிரதேசம்


போபால்: மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்) நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை சிபிஐ நேற்று கைது செய்தது. மேலும், அவர்களிடமிருந்து ரூ.3.85 கோடி பணத்தைக் கைப்பற்றியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியின் வளாகங்கள் உட்பட 25 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் மேலாளரும், செயலாளருமான சுபேதார் ஓஜாவின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இவர் பல ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுரங்க அனுமதிக்காக பணம் வசூலித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், சிங்ராலியில் உள்ள சங்கம் இன்ஜினியரிங் நிறுவனத்தின் உரிமையாளரும், இடைத்தரகருமான ரவிசங்கர் சிங்கையும் சிபிஐ கைது செய்துள்ளது. ரவிசங்கர் சிங் பல ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் என்சிஎல் அதிகாரிகளுக்கு இடையே இடைத்தரகராக செயல்பட்டு அவர்களுக்கு லஞ்சம் பெற உதவியதாக கூறப்படுகிறது.

x