காங்கிரஸ் ஆட்சியில் இந்து அகதிகளுக்கு நீதி வழங்கப்படவில்லை: அமைச்சர் அமித் ஷா விமர்சனம்


அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று 188 இந்து அகதிகளுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கினார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 டிசம்பருக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய, பவுத்த, பார்ஸி, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது.

இந்நிலையில், நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “சிஏஏ என்பது மக்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டு மல்ல. நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாகும். ஏனென்றால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அரசியலால், 1947 முதல் 2014 வரையில், இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படவில்லை.

சிஏஏ என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். உண்மையில் சிஏஏ என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டமில்லை. அது இந்து, சீக்கிய, பவுத்த, பார்ஸி, கிறிஸ்துவ மத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம்தான்” என தெரிவித்தார்.

x