புதுடெல்லி: கொல்கத்தா அரசு மருத்துவமனையின் பயிற்சி பெண் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று பேர் அமர்வு இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை (ஆக.20) விசாரிக்க இருக்கிறது.
மூன்று நீதிபதிகள் அமர்வில், தலைமை நீதிபதியுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை ஏற்கனவே கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. கடந்த வார விசாரணையின் போது வழக்கு விசாரணையை மாநில காவல்துறையிடமிருந்து மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) மாற்றி உத்தரவிட்டது.
கடந்த ஆக.9-ம் தேதி முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் (31 வயது) ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல்துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு நீதி வேண்டும் என்று கோரி மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
சம்பவம் நடந்த மறுநாள், சஞ்சய் ராய் என்ற காவல்துறையுடன் தொடர்புடையை தன்னார்வலர் ஒருவரை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர். அவர் தான் இந்த வழக்கில் முதன்மையான சந்தேக நபர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மருத்துவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அறைகளை சேதப்படுத்தியது என்றாலும், கருத்தரங்கு அறை அப்படியே இருப்பதாகவும் கும்பலால் அந்த அறை தாக்கப்படவில்லை என்றும் கொல்கத்தா போலீஸார் தெரிவித்துள்ளனர்.