பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீஸ் குறித்து தவறான தகவல்: திரிணமூல் எம்.பி.க்கு சம்மன்


சுகேந்து சேகர் ரே | கோப்புப்படம்

கொல்கத்தா: ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மோப்ப நாய் குறித்து தவறான தகவலை பரப்பியதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான சுகேந்து சேகர் ரேவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 4 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அதில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த சுகேந்து ரே, "சிபிஐ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். யாருக்காக எதற்காக தற்கொலை கதை உருவாக்கப்பட்டது என்று மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் போலீஸ் கமிஷனரை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். அந்த அறையின் சுவர்கள் ஏன் இடிக்கப்பட்டன? ராய் இவ்வளவு சக்தி வாய்ந்தவராக உருவாக யார் ஆதரவளித்தார்கள்?, சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது ஏன்? இவ்வாறு நூறு கேள்விகள் எழுகின்றன. அவர்கள் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சுகேந்து ரேயின் மோப்ப நாய் குறித்த கருத்து தவறானது என்று கொல்கத்தா போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிக்கையில், "மூன்று நாட்களுக்கு பின்னர் மோப்ப நாய்கள் அனுப்பப்பட்டன என்ற தகவல் முற்றிலும் தவறானது. ஆக.9ம் தேதியும் பின்பு இரண்டாது தடவையாக ஆக.12ம் தேதியும் மோப்ப நாய்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. பிஎன்எஸ் பிரிவு 35(1)-ன் கீழ் சுகேந்து ரேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் ரே இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூடுதல் அவகாசம் கேட்கலாம் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சுகேந்துவின் கருத்துக்கு அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரது சகா கட்சிக்காரரான குணால் கோஷ், ரேயின் கருத்து துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

x