பாஜகவில் இணையும் வதந்திக்கு மத்தியில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் சம்பாய் சோரன் டெல்லி பயணம்


சம்பாய் சோரன் | கோப்புப்படம்

புதுடெல்லி: பாஜகவில் இணையப்போகிறார் என்ற வதந்திக்கு மத்தியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விமானத்தில் டெல்லி சென்றார். பின்னர் அவர் சொந்த வேலை விஷயமாக தேசிய தலைநகருக்கு வந்ததாக தெரிவித்தார்.

முன்னதாக, சனிக்கிழமை இரவு கொல்கத்தாவில் தங்கிய சம்பாய் சோரன், அங்கு பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளிவந்த பின்னர், சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை தயக்கத்துடன் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனது அரசியல் விருப்பங்கள் குறித்து அவர் ஆராய்ந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணையலாம் என்ற வதந்திகள் அரசியல் வட்டாரங்களில் உலா வருகின்றன. இந்தநிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களுடன் அவர் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இவைகளை மறுத்துள்ள சம்பாய் சோரன் இதுகுறித்து கூறுகையில், "என்ன வகையான வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று கூட எனக்குத் தெரியாது. என்ன செய்தி போய் கொண்டு இருக்கிறது என்றும் தெரியாது. அதனால் அவை உண்மையா பொய்யா என்று என்னால் சொல்ல முடியாது. அவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கம் சம்பாய் சோரன், நிலமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பின்பு அந்த வழக்கில் ஹேம்ந்த் சோரன் ஜாமீனி்ல் வெளியே வந்தநிலையில் ஜூலை 3ம் தேதி சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், சம்பாய் சோரன் விஷயம் காரணமாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்ந் சோரனை பாஜக எம்.பி., தீபக் பிரகாஷ் சாடியுள்ளார். அவர் கூறுகையில், "அவர் (சம்பாய் சோரன்) மிகப்பெரிய ஆளுமை. அவரது பணியில் ஜார்க்கண்ட்டில் உள்ள 3.5 கோடி மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.

அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது. நல்லவர் ஒருவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டத்து மிகவும் பின்னடைவாகும். அவர் செய்த தவறு என்ன?" என்று தெரிவித்தார்.

x