தண்டவாளத்தில் வைக்கப்பட்ட மர்ம பொருளால் உ.பி.யில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது


லக்னோ: உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட மர்ம பொருள் காரணமாக சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 20 பெட்டிகள் நேற்று தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழப்போ அல்லது எவருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் வாராணசியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் வாராணசியில் இருந்துஅமதாபாத் நோக்கி செல்லும்போது, உத்தரபிரதேசத்தின் கான்பூர் - பீம்சேன் ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று அதிகாலை2.30 மணியளவில் தடம்புரண்டது.

தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பாறை போன்ற ஒருபொருள் மீது இன்ஜின் மோதியதாக லோகோ பைலட் கூறியுள்ளநிலையில், இன்ஜின் முன்புற பகுதி(கால்நடைகள் இன்ஜினில் சிக்குவதை தடுக்கும் பகுதி) கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

20 பெட்டிகள்: இந்த விபத்தில் 20 பெட்டிகள் தடம்புரண்டன. எனினும் எவருக்கும்காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதையடுத்து கான்பூரில் இருந்து விபத்து நடந்த பகுதிக்கு 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக கான்பூர் அழைத்து வரப்பட்டனர். பிறகு அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பேருந்துகளும் இயக்கப்பட்டு, பயணிகள் கான்பூர் அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

7 ரயில்கள் ரத்து: இந்த விபத்தால் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 3 ரயில்கள்மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. விபத்து தொடர்பான தகவலுக்கு உதவி எண்களை ரயில்வே அறிவித்துள்ளது.

விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “கான்பூர் அருகே அதிகாலை 2.35 மணியளவில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள் மீது சபர்மதி எக்ஸ்பிரஸ் இன்ஜின் மோதியது. இதில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இன்ஜின் முன்புற பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உளவுத் துறையான ஐ.பி.மற்றும் உத்தரபிரதேச போலீஸார் இது தொடர்பாக விசாரித்துவருகின்றனர். ரயில் பயணிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ காயம் ஏதுமில்லை. அகமதாபாத் செல்லும் பயணிகளுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

x