தேசியக் கொடி போஸ்டரின் மீது நின்ற பஜ்ரங் புனியா: வைரல் வீடியோவால் சர்ச்சை


புதுடெல்லி: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று வினேஷ் போகத்தை வரவேற்கும் போது இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காரின் மீது இருந்த தேசியக்கொடி போஸ்டரின் மீது நின்றுக் கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை உருவாக்கியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். போட்டிக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த நிலையில், பாரிஸில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பினார். தன்னை வரவேற்க வந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பார்த்து கண் கலங்கிய வினேஷ், மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறினார்.

வினேஷ் போகத்தை வரவேற்க சக இந்திய மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். வினேஷுக்கான உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில், பஜ்ரங் புனியா தேசியக்கொடி போஸ்டர் மீது நின்றதால் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இது தொடர்பான ஒரு வீடியோவில், பஜ்ரங் புனியா காரின் பானெட்டின் மீது ஏறி நிற்கிறார். அந்த கார் பேனட்டின் மீது தேசியக்கொடி போஸ்டர் இடம்பெற்றுள்ளது. புனியா கவனக்குறைவாக தேசியக்கொடி போஸ்டரை மிதித்தபடி கூட்டத்தையும், ஊடகங்களையும் நிர்வகிக்கும் காட்சிகள் வெளியாகி சலசலப்புகளை கிளப்பியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங், தேசியக்கொடி போஸ்டரில் நின்று கொடியை அவமரியாதை செய்ததாக நெட்டிசன்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

x