நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியா கொண்டு வரவேண்டும்: பிரதமர் மோடிக்கு பேரன் கடிதம்


கொல்கத்தா: ஜப்பான் ரெங்கோஜி கோயிலில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை, இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது பேரன் சந்திர குமார் போஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சந்திர குமார் போஸ் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு நாளான ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு முன்னதாக, நேதாஜியின் அஸ்தியை ரெங்கோஜியில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

நேதாஜியின் காந்த ஆளுமை, புத்திசாலித்தனம், அசாதாரண தைரியம், தன்னலமற்ற தன்மை மற்றும் இந்திய சுதந்திரத்திற்கான தளராத அர்ப்பணிப்பு ஆகியவை அவரை இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் நாயகனாக்கியுள்ளன.

ஆகஸ்ட் 1945 ல் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் இராணுவ விமானத்தில் தைவானிலிருந்து புறப்படும்போது விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக நம்பப்படுகிறது. இதன் மீது சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. நேதாஜியின் சகோதரர் சரத் சந்திர போஸ் மற்றும் நேதாஜியின் எமிலி உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சுபாஸ் திரும்பி வருவதற்காக தொடர்ந்து ஏங்கினர்.ஆனால் 18 ஆகஸ்ட் 1945 க்குப் பிறகு சுபாஸ் உயிருடன் இருப்பதைப் பற்றி எந்த நேரத்திலும் உறுதியான தகவல் இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘நேதாஜி தொடர்பான கோப்புகளை முடிப்பதற்கு உங்கள் திறமையான தலைமையின் கீழ் இந்திய அரசு முன்முயற்சி எடுத்துள்ளது. அனைத்து கோப்புகளும் (தேசிய மற்றும் சர்வதேச அளவிலான 10 விசாரணைகள்) வெளியான பிறகு இது தெளிவாகிறது. நேதாஜி ஆகஸ்ட் 18, 1945 இல் இறந்தார். எனவே, இந்திய விடுதலைப் போராட்ட வீரரைப் பற்றிய தவறான கதைகள் நிறுத்தப்படுவதற்கு, இந்திய அரசிடமிருந்து இறுதி அறிக்கையை வெளியிட வேண்டியது அவசியம். காலத்தால் அழியாத மாவீரனின் அஸ்தியை அவரது சொந்த நாடான இந்தியாவுக்கு, அவர் விடுவித்த பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும்’ என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்

x