உ.பியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 22 பெட்டிகள் தடம்புரண்டன - மர்மப்பொருள் மோதி விபத்து


லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் (19168) ரயிலின் 22 பெட்டிகள் இன்று அதிகாலை 2.30 மணியளவில், மர்மப்பொருள் மீது மோதியதால் தடம் புரண்டது.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஜான்சி வழித்தடத்தில் புறப்பட்ட 30 நிமிடங்களில் பீம்சென் அருகே 22 பெட்டிகள் தடம் புரண்டன. கோவிந்த்புரி மற்றும் பீம்சென் இடையே உள்ள ஒரு பொருளின் மீது என்ஜின் மோதியதாக ரயிலின் லோகோ பைலட் கூறினார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வட மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் இந்த சம்பவம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார், “சபர்மதி எக்ஸ்பிரஸ் (வாரணாசி முதல் அம்தாவத்) இன்ஜின் இன்று அதிகாலை 02:35 மணிக்கு கான்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருளின் மீது மோதியது. மோதியதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. அந்த தடயங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஐபி மற்றும் உபி போலீசார் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் காயம் இல்லை. அம்தாவத் செல்லும் பயணிகளுக்கு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்

ரயில் மர்மப்பொருளின் மோதியபோது பெரும் சத்தம் கேட்டதாகவும், அதன்பின்னர் பெட்டிகள் தடம் புரண்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர். தண்டவாளம் 50 மீட்டர் வரை சேதமடைந்துள்ளது. தண்டவாளத்தில் உள்ள கிளிப்கள் கழன்று விட்டன.

விபத்தையடுத்து சிறப்பு பேருந்துகள் மற்றும் மெமு ரயில் மூலம் பயணிகள் கான்பூர் மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சஷி காந்த் திரிபாதி தெரிவித்தார், மேலும் அனைவரும் காலையில் ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு செய்த சிறப்பு ரயிலில் அகமதாபாத்திற்கு புறப்பட்டதாக கூறினார்.

இந்த விபத்தினால் மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், எட்டு ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜான்சி-கான்பூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தண்டவாளத்தை அகற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

x