ஊழல் குற்றச்சாட்டு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி


பெங்களூரு: முடா எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய ஊழல் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் அனுமதி அளித்துள்ளார். இச்சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு நகர மேம்பாட்டு கழகம் (எம்யுடிஏ), அதற்கு மாற்றாக 14 வீட்டு மனைகளை அவருக்கு வழங்கிய‌து. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, ஒதுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் முதல்வர் சித்தராமையா பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பாஜகவும், மஜதவும் மைசூரு நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, சமூகஆர்வலர்கள் சிலர் சித்தராமையாவுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், நீங்கள் ஏன் வழக்கை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, "டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மூன்று மனுக்களின் அடிப்படையில் முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்" என்று கர்நாடக ராஜ்பவன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ், ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுவதாக விமர்சித்துள்ளது.

x