கே.சி.வேணுகோபால் தலைமையில் பொதுக்கணக்கு குழு: பிற முக்கிய நாடாளுமன்ற குழுக்கள் அமைப்பு


புதுடெல்லி: பொதுக்கணக்கு குழு (பிஏசி) உட்பட முக்கிய நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்கணக்கு குழுவுக்கு காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால் தலைமை தாங்குகிறார்.

நாடாளுமன்ற குழுக்கள் அமைப்பது குறித்த அறிவிப்பை மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை (ஆக.16) வெளியிட்டது. அதன்படி, நாடாமன்ற பொதுக்கணக்கு குழுவுக்கு காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் தலைமை தாங்குகிறார். பாஜகவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் தலைமையில் மதிப்பீட்டு குழுவும், அவரின் சகாவான பைஜயந்த் பாண்டா பொது நிறுவனங்களுக்கான குழுவுக்கும் தலைமை வகிக்கின்றனர்.

பொதுக்கணக்கு குழு, பொதுநிறுவனங்களுக்கான குழு மற்றும் மதிப்பீட்டுக்குழு ஆகிய மூன்றும் நாடாளுமன்றத்தின் முக்கியமான நிதிக்குழுக்களாகும். இவை, அரசின் கணக்குகள் மற்றும் பொதுநிறுவனங்களின் பணிகளை கண்காணிக்கின்றன.

இந்த மூன்று குழுக்களின் பதவி காலம் ஓராண்டு. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். அவர்கள் இரண்டு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதேபோல், மத்திய அமைச்சரவை மற்றும் துறைகளைக் கண்காணிக்கும் பிற துறைகளைச் சேர்ந்த நிலைக்குழுக்களும் உள்ளன. அதேபோல், இதர பிற்படுத்தப்பட்டவர் நலன்களுக்கான குழு , பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலன்களுக்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான குழுவுக்கு பாஜகவைச் சேர்ந்த கணேஷ் சிங் தலைமை தாங்குகிறார். எஸ்சி மற்றும் எஸ்டி நலன்களுக்கான குழுவுக்கு பாஜகவின் ஃபக்கான் சிங் குலாஸ்தே தலைமை தாங்குகிறார்.

x