கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி முதல்வர் மம்தா பேரணி


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண்மருத்துவர் ஒருவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சஞ்சய் ராய் (33)என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரச்சினை பெரிதானதால் பெண் மருத்துவர் கொலை வழக்கை கடந்த செவ்வாய்க்கிழமை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறும்போது, “இந்த வழக்கில் கொல்கத்தா போலீஸார் ஏற்கெனவே 90 சதவீதம் விசாரணையை முடித்துவிட்டனர் ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 18)குற்றவாளிக்கு மரண தண்டனையை சிபிஐ உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

இதையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதிசெய்யக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் பேரணி சென்றார். அப்போது மம்தா கூறும்போது, “இந்த விவகாரத்தில் பொதுமக்களின் போராட்டத்துக்கு தலைவணங்குகிறேன். மருத்துவமனை சேதப்படுத்தப்பட்டதில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு தொடர்பு உள்ளது” என்று தெரிவித்தார்

x