மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்? - தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்


புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தேவை அதிகமாக இருப்பதால், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது போல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தமுடியவில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஹரியாணாவுக்கு அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் அக்டோபர் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

புது டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

ஹரியாணா மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 3ம் தேதியும், மகாராஷ்டிராவின் பதவிக்காலம் நவம்பர் 26ம் தேதியும் முடிவடைகிறது. எனவே ஹரியாணா மட்டுமின்றி மகாராஷ்டிராவுக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்துப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “2019ல் மகாராஷ்டிராவுக்கும் ஹரியானாவுக்கும் ஒன்றாக தேர்தல் நடந்தது. அப்போது, ​​ஜம்மு காஷ்மீர் ஒரு காரணியாக இல்லை. இம்முறை இந்த ஆண்டு நான்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன மற்றும் ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் உடனடியாக டெல்லி என 5 தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஜம்மு காஷ்மீரின் அதிக அளவிலான படைகளின் தேவைகளைப் பொறுத்து, ஒரே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாணாவுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்தோம். இதனிடையே இன்னொரு தேர்தலை அறிவிக்க முடியாது” என்று கூறினார்.

மேலும், "மகாராஷ்டிராவில் பெய்யும் மழை மற்றும் விநாயக சதுர்த்தி, பித்ராபக்ஷ், நவராத்திரி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் தேர்தல் அட்டவணையை பாதிக்கிறது. அதேபோல வானிலை சீரானவுடன் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் 46 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும். சில மாநிலங்களில், சுற்றுச்சூழலும் வானிலையும் மோசமாக இருப்பதால், இப்போது இடைத்தேர்தலை நடத்த முடியாது" என்று குமார் கூறினார்.

x