வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்: பிரதமர் மோடிக்கு முகமது யூனுஸ் நம்பிக்கை


புதுடெல்லி: வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வங்கதேச நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலையடைந்துள்ளதால், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும் என நேற்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பேராசிரியர் முகமது யூனுஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டார். ஜனநாயக ரீதியான, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அவர் உறுதியளித்தார்’ என்று பிரதமர் மோடி கூறினார்.

சில நாட்களுக்கு முகமது யூனுஸ் தலைநகர் டாக்காவில் உள்ள தாகேஸ்வரி கோயிலுக்குச் சென்று அங்குள்ள இந்துக்களிடம் பேசினார். மேலும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகியதை அடுத்து நடந்த வன்முறையின் போது சிறுபான்மையினரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

x