ஒடிசா: பாரதீப் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எகிப்து நாட்டு கப்பல் ஒடிசா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி பாரதீப் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல், குறைந்த கந்தகம் கொண்ட கடல் பெட்ரோலை கொண்டு செல்வது தொடர்பாக ஜெர்மன் நிறுவனத்திற்கு ரூ. 3.96 கோடி கடன் நிலுவை உள்ளதால், இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கப்பலை தடுத்து நிறுத்தக் கோரி ஒடிசா உயர் நீதிமன்றத்தில் ஜெர்மன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இதனை ஏற்ற நீதிமன்றம் ஆகஸ்ட் 14ம் தேதி கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்டதாக துறைமுக அதிகாரி தெரிவித்தார்.
அட்மிரால்டி சட்டத்தின் கீழ், எந்தவொரு கப்பலின் உரிமை, கட்டுமானம், உடைமை, மேலாண்மை, செயல்பாடு அல்லது வர்த்தகம் ஆகியவற்றிலிருந்து எழும் கடல்சார் உரிமைகோரல்களைச் செயல்படுத்துவதற்காக ஒரு கப்பல் சிறைபிடிக்கப்படலாம்.
கப்பல் சிறைபிடிக்கப்பட்டதை மேற்பார்வையிட உள்ளூர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஒருவர் அட்மிரலாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை கப்பல் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
பாரதீப் துறைமுகத்தில் இருந்து 55,000 மெட்ரிக் டன் இரும்புத் தாதுகளை ஏற்றிக்கொண்டு எம்வி வாடி அல்போஸ்தான் என்ற இந்த எகிப்திய கப்பல் சீனாவுக்குச் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு மாதங்களில் பாரதீப் துறைமுகத்தில் நடந்த மூன்றாவது சிறைபிடிப்பு சம்பவம் இதுவாகும்.