பட்ஜெட் 2024: வீட்டுக்கடனில் அதிரடி மாற்றம்... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாற்றங்கள்?!


ரியல் எஸ்டேட்

கொரோனா காலத்தில் வெகுவாக அடிவாங்கிய துறைகளில் முக்கியமானது ரியல் எஸ்டேட் துறை. கொரோனா தாண்டவம் தணிந்த பிறகும், ரியல் எஸ்டேட் துறை மீண்டெழ இயலாது தவித்து வருகிறது.

இடைக்கால பட்ஜெட் என்பது எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு வசீகர அறிவிப்புகளோடு தயாராகும் என்பதால், அதில் ரியல் எஸ்டேட் துறைக்கான சில சாதக அறிவிப்புகளும் பெருமளவு எதிர்பார்க்கப்படுகின்றன.

2024 இடைக்கால பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்புகள் என்பதில், கட்டுப்படியாகும் விலை அல்லது மலிவு விலையில் வீடு என்பதற்கான வரையறையில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் முதலிடம் பிடிக்கின்றன. அடுத்தபடியாக வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டியில் விலக்கு அதிகரிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட்

அனைவருக்கும் வீடு என்பதை அரசு ஊக்குவித்து வருவதாலும், அது சார்ந்த சலுகைகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்பதாலும், இந்த இரண்டும் சார்ந்த அறிவிப்புகளை ரியல் எஸ்டேட் துறை பெரிதும் எதிர்பார்த்துள்ளது. இந்திய ரியல் எஸ்டேட் டெவலெப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, பட்ஜெட்டுக்கு முன்பாக இவை குறித்து அரசிடம் தங்கள் வலியுறுத்தலை முன்வைத்தது.

இந்த அமைப்பின் பட்ஜெட்டுக்கு முந்தைய இன்னொரு பரிந்துரையாக, வீட்டுக் கடனுக்கான அசல் திருப்பிச் செலுத்துவதில் 80C என்பதன் கீழ் மேலும் விலக்கு கோரியது. அதாவது தற்போதுள்ள ரூ1,50,000 என்பதிலிருந்து அதன் வரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரி உள்ளது. வீட்டுக் கடன்களுக்கான வட்டித் திருப்பிச் செலுத்துவதற்கான விலக்கு வரம்பை அதிகரிப்பதற்கும் கோரப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்

கட்டுப்படியாகும் விலையிலான வீடு என்ற வரையறை 2017-க்குப் பிறகு மாற்றப்படவில்லை. ரூ.45 லட்சம் செலவில் கட்டப்படும் வீடுகளே இந்த வரையறைக்குள் அடங்கும். ஆனால் கொரோனா காலத்துக்குப் பிந்தைய பணவீக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் துறையில் வீடுகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. எனவே இந்த வரையறையின் வரம்பு ரூ.45 லட்சம் என்பதிலிருந்து சற்றேனும் அதிகரிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இ.எம்.ஐ முறையில் வீடு வாங்குபவர்களுக்கு உதவும் வகையிலும், வருமான வரி பிரிவு 80சி என்பதன் கீழ் வீட்டுக் கடன்களின் அசல் திருப்பிச் செலுத்துவதற்கான வரம்புகள் மேலும் உயர்த்தப்படுவது, ரியல் எஸ்டேட் துறையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனையாவதற்கு ஊக்கமளிக்கக் கூடும். சுயமாக ஆக்கிரமித்துள்ள சொத்தின் போது செலுத்தப்படும் வட்டிக்கான வரி விலக்கு வரம்பை தற்போதைய ரூ.2 லட்சத்தில் இருந்து, ரூ.3 முதல் 4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது.

அதே போன்று வீட்டுக் கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்துவததில் விலக்கு வரம்பு ரூ.2 லட்சமாக தற்போது இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இவற்றில் அடங்கும். 80EEA மற்றும் 80EE இன் கீழ் வட்டி விலக்குகள் முறையே ரூ.150,000 மற்றும் ரூ. 50,000 என்ற தற்போதைய வரம்பிலிருந்து அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இவற்றில் சேரும்.

x