பிரதமர் மோடியின் 98 நிமிட சுதந்திர தின உரையில் ‘அரசியல்’ அம்சம் என்ன?


பிரதமர் நரேந்திர மோடி

நாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 11-வது முறை தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் 65 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றினார். கடந்த 2016, 2018, 2022, 2023-ம் ஆண்டுகளில் 90 நிமிடங்களுக்கும் மேலாக அவர் உரையாற்றினார். கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் மோடி செங்கோட்டையில் 56 நிமிடங்களில் சுதந்திர தின உரையை நிறைவு செய்தார். இது அவருடைய குறுகிய நேர உரை ஆகும். தற்போது அவர் 98 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றி உள்ளார். இது அவரின் மிக நீண்ட உரை ஆகும். இதில் இடம்பெற்ற முக்கிய அரசியல் அம்சங்கள்

“வாரிசு அரசியல், சாதி அரசியல் நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளன. ‘எனது பாரதம்’ திட்டம் சார்ந்த இணையத்தில் ஏராளமான இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசியல் பின்புலம் இல்லாத சுமார் ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசமைப்பு சாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழை, எளிய மக்கள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் பாதுகாவலனாக அரசமைப்பு சாசனம் விளங்குகிறது. இந்த சூழலில் பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து உச்ச நீதிமன்றம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.

தற்போது 75-வது ஆண்டு அரசமைப்பு சாசன தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் பொது சிவில் சட்டம் என்ற லட்சிய கனவை நிறைவேற்றுவது அவசியம். இன்றைய நவீன உலகில் மதம் அடிப்படையிலான சட்டங்கள் தேவையில்லை. மதச்சார்பற்ற சிவில் சட்டங்களே நாட்டுக்கு தேவை. இந்த இலக்கை நோக்கி நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு பல்வேறு காலங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அப்போது தேர்தல் நடத்தை விதிகளால் அரசு திட்டப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது.

எனவே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த செங்கோட்டையில் இருந்து அழைப்பு விடுத்தேன். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம், திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்திருக்கிறது. இந்த கனவு திட்டத்தை நனவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார் பிரதமர் மோடி.

x