தேர்தல் பிரச்சாரத்தில் ரிலீஸ் குறித்து பேசிய கேஜ்ரிவால்: உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை


புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சார பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார் அளித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் பெற்றார். ஜூன் 2-ம் தேதி அவர் சரணடைய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி மற்றும் ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த அரவிந்த் கேஜ்ரிவால், "லோக்சபா தேர்தலுக்கு முன் நான் கைது செய்யப்பட்டேன். திஹார் சிறையில் எனக்கு இன்சுலின் ஊசி கொடுக்கப்படவில்லை. ஜூன் 2-ம் தேதி நான் மீண்டும் திஹார் சிறையில் சரணடைய வேண்டும்.

ஜூன் 4-ல் சிறையில் இருந்தே மக்களவை தேர்தல் முடிவுகளை பார்ப்பேன். மக்கள், இண்டியா கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜூன் 5-ம் தேதி திஹார் சிறையில் இருந்து ரிலீஸ் ஆவேன். மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மக்கள் வாக்களித்தால், நான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை" என்று பேசினார்.

இப்படி, தேர்தலில் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்தால், தான் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புகார் அளித்தது.

இதுதொடர்பாக வழக்கு விசாரணையின்போது "இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள கேஜ்ரிவால் எப்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தார்?. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்" என்று அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

ஆனால், நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறுகையில், "எங்களின் தீர்ப்பு மீதான விமர்சனங்களை வரவேற்கிறோம். அதேநேரம், கேஜ்ரிவால் எப்போது சரணடைய வேண்டும் என்பது எங்கள் உத்தரவில் தெளிவாக உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. மேலும், நடப்பது சட்டத்தின் ஆட்சி. எனவே, நாங்கள் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை" என்று கூறி அமலாக்கத் துறை வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

x