கின்னஸ் சாதனை... 20,500 சதுர அடியில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இந்திய வரைபடம்!


கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்திய தேசத்தின் வரைபடம் கின்னஸ் சாதனையில் இடம்பெற்று உலக சாதனைப் படைத்துள்ளது.

திருச்சூர் மாவட்டத்தில், பெரும்பிலாவு அன்சார் ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 5,112 பேர் இணைந்து இந்திய தேசத்தின் வரைபடத்தை உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

இன்று நாடு முழுவதும் 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இந்த தேச வரைப்படம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

பள்ளியின் கலை ஆசிரியர் நௌபான் அவர்களின் வழிகாட்டலில் பள்ளியின் மைதானத்தில் நடைபெற்ற இம்முயற்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் கலந்துகொண்டனர். இந்த வரைபடம் 20,500 சதுர அடி அளவில் இருந்தது.

கின்னஸ் சாதனையாளர்களின் மாநிலத் தலைவர் கின்னஸ் சத்தார் ஆதூர் அவர்கள் சாதனை படைத்த பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். 2018ம் ஆண்டில் ருமேனியாவில் 4,807 பேர் கொண்ட குழு ருமேனியாவின் தேச வரைபடத்தை உருவாக்கியதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

x