அமலாக்கத்துறையின் இயக்குநராக ராகுல் நவீன் நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு 


புதுடெல்லி: அமலாக்கத்துறையின் முழு நேர இயக்குநராக ராகுல் நவீனை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக ராகுல் நவீன் இருந்து வருகிறார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, " மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, ராகுல் நவீனை அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கிறது. அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலாக்கத்துறை இயக்குநராக அவரை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

தற்போது அமலாக்கத்துறையின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வரும் நவீன், 1993ம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரி ஆவார். 57 வயதான நவீன், நவம்பர் 2019 இல் அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக சேர்ந்தார். அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் செப்டம்பர் 15, 2023 அன்று முடிவடைந்ததை அடுத்து, ராகுல் நவீன் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

x