அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது - கைவிரித்தது உச்ச நீதிமன்றம்!


புது டெல்லி: அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. அமலாக்கத் துறையின் பல்வேறு சம்மன்களை நிகராகரித்த பின்னர் கடந்த மார்ச் 21-ம் தேதி கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில், மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள மே மாதம் 10ம் தேதியிலிருந்து ஜூன் 2ம் தேதி வரை கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 26-ம் தேதியன்று திகார் சிறையில் வைத்து கேஜ்ரிவாலை கைது செய்தது. இதனையடுத்து தன்னை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சிபிஐ-யின் கருத்துக்களை பெறாமல் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

x