புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றம்!


புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என மத்திய அரசை வலியுறுத்தும் தனிநபர் தீர்மானங்கள் அரசு தீர்மானமாக இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏ-க்கள் நாஜிம், செந்தில்குமார், சுயேட்சை எம்எல்ஏ-வான நேரு ஆகியோர் தனி உறுப்பினர் தீர்மானங்களை பேரவையில் இன்று கொண்டு வந்தனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்; அதை பெற்றே தீர வேண்டும். இது தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை டெல்லிக்கே சென்று நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் வைப்போம். மாநில அந்தஸ்தை பெற்றே தீருவோம். அதற்காக இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்” என்றார்

இதையடுத்து தனி உறுப்பினர்கள் தீர்மானத்தை திரும்பப் பெற்றனர். அதனை தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் அரசு தீர்மானமாக அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் உள்துறையால் ஆளும் பகுதியாக தொடர்கிறது. கோவா, சண்டிகர் தனி மாநிலங்களாகிவிட்டன. புதுச்சேரிக்கும் தனி மாநில அந்தஸ்து கோரி பலமுறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்தவிதத்தில், மாநில அந்தஸ்து கோரிக்கை 1970-ல் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய அரசு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இச்சட்டப்பேரவை வலியுறுத்துகிறது’ என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x