புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பத்தாவது முறையாக அவர் பரோலில் வெளியே வருகிறார்.
ஆகஸ்ட் 9 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் குர்மீத் ராம் ரஹீமின் பரோலுக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், அவரின் பரோல் மனுவை "தன்னிச்சையாகவோ அல்லது ஆதரவாகவோ" இல்லாமல் தகுதியான அதிகாரியால் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது.
குர்மீத் தனது பரோல் மனுவில், தேரா சச்சா சவுதா நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து அவருக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. சிறையில் இருந்து இன்று காலை 6.30 மணியளவில் வெளிவந்த குர்மீத் ராம், உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கவுள்ளார்.
குர்மீத் ராம் ரஹீம் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் 50 நாள்கள் பரோலில் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு 21 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளில் 10 முறை பரோல் வழங்கப்பட்டு 261 நாட்கள் சிறைக்கு வெளியே இருந்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 40 நாட்கள், பிறகு ஜூலை 40 நாட்கள், நவம்பர் 21 நாட்கள் பரோலில் வெளிவந்தார். 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் 21 நாட்கள், பின்னர் ஜூன் மாதத்தில் ஒரு மாதம், பின்னர் அக்டோபரில் 40 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். 2021ல் மே மாதம் அவரது தாயை சந்திக்க 12 மணிநேர பரோல் வழங்கப்பட்டது. அதற்கு முன், 2020 அக்டோபரில் அவர் 40 நாட்கள் பரோலில் வெளியே வந்தார்.
ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பத்திரிகையாளர் சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங் வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால், ரஞ்சித் சிங்கை கொலை செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் இந்த வழக்கிலிருந்து கடந்த மே மாதம் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்தது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம்.