செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு


புதுடெல்லி/சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில்நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை அமலாக்கத் துறை முன்வைத்து வருவதாக செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி குற்றம்சாட்டினார். பதிலுக்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த வழக்கின் விசாரணை எதனால் தாமதமாகி வருகிறது என்பதற்கான காரணங்களை தனியாக மனுவாக தாக்கல் செய்கிறோம் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒவ்வொரு முறை இந்தவழக்கு விசாரணைக்கு வரும்போதும் அமலாக்கத் துறை வெவ்வேறு காரணங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே செல்கிறது. கீழமை நீதிமன்றத்தில் விசாரணை எப்போது நிறைவடையும்?.

இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை ஒருவரை சிறையிலேயே தொடர்ந்து வைத்திருக்க முடியாது. மணீஷ் சிசோடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் அதே ரீதியில் செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் வழங்க முடியும்தானே என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், தற்போது மனுதாரர் அமைச்சராக இல்லை. கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். மனுதாரருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்த வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும் என்பதை கூற முடியாது. மனுதாரர் 5 முறை சட்டப்பேரவை உறுப்பினர். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அதற்கு அமலாக்கத் துறை தரப்பில், இந்த வழக்கில் சாட்சியங்களாக இருப்பவர்கள் ஒருவித அச்சத்துடன்தான் உள்ளனர். எனவே எக்காரணம் கொண்டும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

அனுமதி கிடைக்கவில்லை: இதனிடையே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வசூலித்து மோசடிசெய்ததாக செந்தில் பாலாஜி மீதுசென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளை பதிவுசெய்திருந்தனர். இதன் மீதானவிசாரணை சென்னை எம்.பி.,எம்எல்ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஜெயவேல்முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான விசாரணை அதிகாரி கூறும்போது, கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதையடுத்து செப்.12-க்கு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.

x