வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது - பிரியங்கா காந்தி ஆதங்கம்


புதுடெல்லி: வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அங்குள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்யவேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். வங்கதேச வன்முறையின்போது இந்துக்கள் கடுமையாக தாக்கப்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பல இந்துக் கோயில்கள் சூறையாடப்பட்டன.

இதைக் கண்டித்து வங்கதேசத்திலும், வெளிநாடுகளில் உள்ள இந்துக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய செய்தி கவலையளிக்கிறது. மதம், சாதி, மொழி அல்லது அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு, வன்முறை மற்றும் தாக்குதல்கள் எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

வங்கதேசத்தில் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்றும், அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்யும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

x