வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி - கேரள வங்கியின் அதிரடி அறிவிப்பு


வயநாடு: நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கேரள வங்கி. அந்த வங்கியின் சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு உள்ளிட்ட கிராமங்கள் உருக்குலைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்ற நிலையில், 11 நாட்களைக் கடந்து மீட்பு பணிகள் நீடித்து வருகிறது.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் கேரளா வங்கியின் சூரல்மாலா கிளையில் பெற்ற கடனை அந்த வங்கி நிர்வாகம் முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது. கேரள வங்கி சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியான கேரளா வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை நன்கொடை வழங்கியதுடன், வங்கி ஊழியர்களும் தானாக முன் வந்து 5 நாட்கள் சம்பளத்தை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தானமாக அளித்துள்ளனர்.

x