சிர்சில்லா: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், நாட்டின் தேசிய பறவையான மயிலின் கறியை சமைத்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் கைது செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் கோடம் பிரணாய் குமார். இவர் உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். தற்போது பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் மயிலை சமைத்து அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சை வெடித்தது.
சர்ச்சைக்குப் பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். இதனையடுத்து பிரனாய் குமார் மீது பாதுகாக்கப்பட்ட உயிரினத்தை கொன்றதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குமாரை கைது செய்த வனத்துறையினர், 'மயில் கறி' சமைத்த இடத்தை ஆய்வு செய்து வீடியோ எடுத்தனர்.
இதனையடுத்து யூடியூபரின் இரத்த மாதிரிகள் மற்றும் வீடியோ எடுத்த இடத்தில் கிடந்த கறியின் பாகங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் மயில் இறைச்சி உண்டது உறுதியானால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
பிரணாய் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிர்சில்லா காவல் கண்காணிப்பாளர் அகில் மகாஜன் தெரிவித்தார். "அவர் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களைச் செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.