ஜெகனாபாத்: பிஹாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள பாபா சித்தேஷ்வர் நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெகனாபாத்தின் பாரபார் பஹாடி பகுதியில் உள்ள பாபா சித்தேஷ்வர் நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் பியாரே பஸ்வான் (30), நிஷா தேவி (30), புனம் தேவி (30), நிஷா குமாரி (21), மற்றும் சுசீலா தேவி (64) என அடையாளம் காணப்பட்டனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
காயமடைந்தவர்கள் முகுந்தபூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு 10 பேர் வீடு திரும்பினர் மற்றும் ஆறு பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கோயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோயிலுக்கு வெளியே பக்தர்களுக்கும் பூ விற்பனையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.