வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்திய பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது முதல் அனைத்துத் தகவல்களையும் கேட்டு பெற்றுவருகிறேன். நிலச்சரிவு ஏற்பட்டவுடன் மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் முடுக்கிவிடப்பட்டு மீட்புப் பணிகள் விரைவாக நடத்தப்பட்டன.
இந்த நிலச்சரிவு சாதாரணமானதல்ல. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவை இந்த நிலச்சரிவு சிதைத்துவிட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டபோது மிகவும் வேதனை அடைந்தேன். முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை கனத்த இதயத்துடன் சந்தித்தேன். காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினேன்.
நிலச்சரிவு ஏற்பட்ட அன்று காலை முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தேன். மேலும், மீட்புப் பணிகளுக்கான குழுக்களை விரைந்து அங்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தேன். அதன்பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, போலீஸார், டாக்டர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் விரைவாக உதவ முன்வந்தனர். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு யாருமில்லை என்று வருந்த வேண்டாம். அவர்களுக்கு பக்கபலமாக நாம் அனைவரும் இருப்போம். நிதி இல்லை என்றகாரணத்தால் எந்தக் காரணத்தைமுன்னிட்டும் நிவாரணப் பணிகள் நிற்காது என்று உறுதி அளிக்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு வாய்ப்புகள் உள்ள அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைவரின் பிரார்த்தனையும் உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும். இவ்வாறு பிரதமர் கூறினார்.