‘சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வோம்’ - வயநாட்டில் பிரதமர் மோடி உறுதி


கேரளா: வயநாடு மறுவாழ்வுப் பணிகளுக்கு நிதி ஒருபோதும் தடையாக இருக்காது. மாநில அரசு முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர், 138 பேரை காணவில்லை.

பிரதமர் மோடி வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, தரை மார்க்கமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் பிரதமர் மோடி. இதனை தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டபோதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோதும் என் இதயம் கனத்துவிட்டது. மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. கேரளா தனித்து விடப்படவில்லை. ஒட்டுமொத்த தேசமும் கேரள மக்களோடு இருக்கிறது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; நீங்கள் தனித்து விடப்படவில்லை. மத்திய அரசும், கேரள அரசும் இணைந்து வயநாட்டை மீட்டுருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும். மறுவாழ்வுப் பணிகளுக்கு நிதி ஒருபோதும் தடையாக இருக்காது. மாநில அரசு முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

x