வயநாடு நிலச்சரிவு: கேரள முதல்வரிடம் ரூ.1 கோடி நன்கொடை அளித்த தமிழ் நடிகைகள்


கேரளா: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக தமிழ் நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி உள்ளிட்டோர் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர், 138 பேரை காணவில்லை.

இந்த நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே பல்வேறு தரப்பிலிருந்தும் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி உள்ளிட்டோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நடிகை குஷ்பு, ‘சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம். ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பு சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்ஷன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரஹ்மான், சாம்பியன் பெண் ஆகியோருக்கு நன்றி. எங்கள் பிரார்த்தனைகள் வயநாடு மக்களுடன் உள்ளன’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.

x