வயநாடு நிலச்சரிவு: ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!


கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார்.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர்,138 பேரை காணவில்லை.

வயநாடு நிலச்சரிவை ஆய்வு செய்ய பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு இன்று காலை 11 மணிக்கு வந்தடைந்தார். அவரை கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வில் கேரள ஆளுநர், முதல்வர், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோரும் உடன் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களையும், நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். மேலும், தற்போதைய மீட்புப் பணி நிலவரம் குறித்து ராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார்.

இந்த ஆய்வின் போது வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடியிடம் விளக்கமளித்தார். இந்த ஆய்வுக்குப் பின்னர் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் கூடுதல் நிவாரணங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பேரிடர் பாதித்த வயநாடு பகுதியில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கேரள அரசு ரூ. 2,000 கோடி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x