பச்சிளம் குழந்தையை கடித்து தின்ற தெருநாய்கள் - அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்


தெலங்கானா: வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் தின்று கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் தெருநாய்கள் ஒரு பச்சிளம் குழந்தை சாப்பிடுவதைக் கண்டறிந்து, அந்த நாய்களை மருத்துவமனையின் காவலர்கள் விரட்டியடித்தனர்.

இதனையடுத்து, அங்கே சென்று பார்த்தபோது, தெருநாய்கள் பச்சிளம் குழந்தையின் இடுப்புக்கு கீழே உள்ள உடலுறுப்புகளை சாப்பிட்டது தெரியவந்தது. உடலின் கீழ் பகுதியை நாய்கள் தின்றுவிட்டதால், அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நாய்கள் கடிப்பதற்கு முன்பு குழந்தை உயிருடன் இருந்ததா அல்லது இறந்துவிட்டதா என்பதும் தெரியவில்லை. மேலும் குழந்தை எப்படி அந்த இடத்திற்கு வந்தது என்பது குறித்தும் தெளிவாகத் தெரியவில்லை.

இதுகுறித்துப் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் முரளி, “வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் பிரசவங்கள் எதுவும் நடக்கவில்லை, மேலும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தாய்மார்கள் கூட குழந்தை காணாமல் போனதாக புகார் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

போலீஸார் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளிடம் விசாரணை நடத்தியும் இதுகுறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக மாட்வாடா போலீஸார் கூறினார். புதிதாகப் பிறந்த குழந்தையை யாராவது மருத்துவமனையில் விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

x