வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு


புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப் பட்டது.

இதற்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாவை ஆய்வு செய்ய 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு நேற்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் 21 மக்களவை உறுப்பினர்களும், 10 மாநிலங்களவை உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித் துள்ளார்.

இந்தக் கூட்டுக் குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். திமுக, காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இடம்பெற்று உள்ளனர்.

இந்த கூட்டுக் குழுவானது, வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் வக்பு வாரியம் வசம் 9.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி ஆகும்.

இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களை மத்திய பாஜக அரசு செய்துள்ளது. இதன்படி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெறலாம். வாரியத்தில் பெண்கள் இடம்பெறவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

வாரிய சொத்துகள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வக்பு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

இந்நிலையில், இந்தச் சட்டதிருத்தம் அரசமைப்பு விதிகளைமீறுவதாகவும் சிறுபான்மையினர்களின் உரிமையை பறிப்பதாகவும் உள்ளது என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சித் துள்ளனர்

x