மாநிலங்களவை தலைவருடன் ஜெயா பச்சன் வாக்குவாதம்: சோனியா காந்தி தலைமையில் வெளிநடப்பு


காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில், ஜெயா பச்சன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன், சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்பியாக பதவி வகிக்கிறார். கடந்த ஜூலை 29-ம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அவையை நடத்தினார். அப்போது சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சனை பேச அழைக்கும்போது, “ஜெயா அமிதாப் பச்சன்’’ என்று ஹரிவன்ஷ் குறிப்பிட்டார்.

இதற்கு ஜெயா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். “என்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதும். கணவரின் பெயரால்பெண்கள் அறியப்பட தேவையில்லை’’ என்று அவர் கூறினார்.

இதன்பிறகு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவையை நடத்தினார். அப்போது அவரும், “ஜெயா அமிதாப் பச்சன்’’ என்றே அழைத்தார். இதற்கு ஜெயா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சூழலில் மாநிலங்கள வையை நேற்று வழிநடத்திய அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மீண்டும் "ஜெயா அமிதாப் பச்சன்" என்று குறிப்பிட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமை யான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜெயா பச்சன் கூறும்போது, “நான் நடிகை. உங்களது உடல்மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியும். உங்களது குரல்தொனி ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை" என்று தெரிவித்தார்.

இதற்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறும்போது, “உங்கள் இருக்கையில் அமருங்கள். ஒரு நடிகை, இயக்குநரால் இயக்கப்படுகிறார். இது உங்களுக்கு தெரியும். நாள்தோறும்உங்களுக்கு அறிவுரை கூற எனக்கு விருப்பமில்லை. உங்களதுசெயலை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது. நீங்கள் பிரபலநடிகையாக இருக்கலாம். ஆனால் அவையில் கண்ணியத்தை கடைப்பிடிப்பது அவசியம். அவைத் தலைவரை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது" என்று கண்டித்தார்.

இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவருக்கும் சமாஜ்வாதிஎம்பி ஜெயா பச்சனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிஎம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து ஜெயா பச்சன் கூறும்போது, ‘‘அவைத் தலைவர்வரம்பு மீறி பேசுகிறார். அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

x