17 மாதங்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார் மணீஷ் சிசோடியா - தொண்டர்களிடையே நம்பிக்கை உரை!


டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி 17 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

டெல்லி மதுபான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா இன்று மாலை டெல்லியின் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த அவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் மழையில் நின்றபடி பேசிய மணீஷ் சிசோடியா, “ காலையில் இந்த உத்தரவு வந்ததில் இருந்து, என் தோலின் ஒவ்வொரு அங்குலமும் பாபாசாகேப் அம்பேத்கருக்கு கடமைப்பட்டதாக உணர்கிறேன். பாபாசாகேப்பிற்கு நான் இந்தக் கடனை எப்படி செலுத்துவது என்று எனக்குப் புரியவில்லை.

உங்கள் அன்பு, கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் சத்தியத்தின் வலிமை மற்றும் எல்லாவற்றையும் விட பாபாசாகேப்பின் மிகப்பெரிய கனவினால் நான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளேன். ஏதேனும் சர்வாதிகார அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், சர்வாதிகாரச் சட்டங்களை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் தள்ளும். ஆனால் இந்த நாட்டின் அரசியலமைப்பு அவர்களை பாதுகாக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த அதிகாரத்துடன், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று சிசோடியா கூறினார். பின்னர் அவர் டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலின் இல்லத்திற்குப் புறப்பட்டார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து. அதே ஆண்டு மார்ச் 9 ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்தது. இதன் காரணமாக மணிஷ் சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் இருந்தார். அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

x