வக்ஃப் சட்டத் திருத்த மசோதா - 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்தது மத்திய அரசு!


புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வுசெய்ய, பா.ஜ.க எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தது மத்திய அரசு. இந்த புதிய திருத்த மசோதாவின்படி வக்ஃப் வாரியத்தில் பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், இந்தச் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப மத்திய அரசு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மக்களவையில் பாஜகவின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் ஆ. ராசா, ஓவைசி, தேஜஸ்வி சூர்யா, இம்ரான் மசூத், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட 21 பேர் மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கூட்டுக்குழுவில் பாஜக, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x