கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடைவிதித்த உத்தரவுக்கு தடை - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


புதுடெல்லி: மும்பை கல்லூரி வளாகத்திற்குள் ஹிஜாப், நிகாப், பர்தா, தொப்பிகள் போன்ற உடைகளை அணிவதற்கு தடை விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் பகுதியளவு தடை விதித்துள்ளது. மேலும், கல்லூரி வளாகத்தில் பொட்டு, திலகம் வைக்க வேண்டாம் என உங்களால் கூற முடியுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை செம்பூரில் என்.ஜி. ஆச்சார்யா மற்றும் டி.கோ. மராத்தா எனும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த மே1ம் தேதி ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் இந்தக் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அந்த கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், கல்லூரி முதல்வரிடம் விசாரித்தபோது, “இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகள் மத அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு ஆடை கட்டுப்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், என்.ஜி. ஆச்சார்யா மற்றும் டி.கோ. மராத்தா எனும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் ஒரு இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கல்லூரியின் இந்த முடிவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ‘ மாணவ மாணவிகளிடம் ஒரே மாதிரியான ஆடைக் குறியீட்டை அமல்படுத்துவதற்கும் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் கல்லூரி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது இதனை அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கருத முடியாது’ என்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘பொட்டு, திலகம் வைக்க வேண்டாம் என உங்களால் கூற முடியுமா? அதற்கு தடை விதிக்க முடியுமா?. பெயரிலேயே மதத்தை கண்டுபிடித்து விடலாமே? அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா?. பெண் மாணவிகள் தாங்கள் அணியும் உடையில் தேர்வு சுதந்திரம் இருக்க வேண்டும், கல்லூரி அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. நாட்டில் பல மதங்கள் உள்ளன என்பதை அறிந்து நீங்கள் திடீரென்று விழித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து ஹிஜாப் அணியத் தடை விதித்த மும்பை கல்லூரியின் உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர். ஆனாலும், வகுப்பறைக்குள் பெண்கள் ஹிஜாப் அணிவதை அனுமதிக்க முடியாது என்றும், வளாகத்தில் மத நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

x