வயநாடு பகுதியில் அடுத்த அதிர்ச்சி - பல்வேறு இடங்களில் நில அதிர்வு


கேரளா: நிலச்சரிவில் சிக்கி இன்னும் மீளாத வயநாடு மாவட்டத்தில் இன்று லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை போன்ற மலை கிராமங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியும், பாறைகள், கற்கள் தாக்கியும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வயநாடு மாவட்டம் வைத்திரி தாலுகாவில் அன்னப்பாறை, தாழத்துவயலில், நென்மேனி, குறிச்சியார்மலை, பினாங்கோடு, எடக்கல், மூரிக்காப்பு, அம்புகுத்திமலை மற்றும் அம்பலவயல் ஆகிய பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனை உணர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு சாலையில் தஞ்சமடைந்தனர்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாட்டில், தற்போது லேசான நில நடுக்கம் உணரப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. நிலநடுக்கத்தை அடுத்து புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் நில அதிர்வு குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

x