வங்கதேச சிறைகளிலிருந்து தப்பிய 1,200 கைதிகள் இந்தியாவுக்குள் நுழையலாம் - எல்லை பாதுகாப்புப் படை எச்சரிக்கை


புதுடெல்லி: பயங்கரவாதிகள் உட்பட 1,200 கைதிகள் வங்கதேச சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்கள் ஆயுதங்களுடன் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்யலாம் எனவும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வங்கதேச பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல வாரங்களாக வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன, இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். ஆனாலும் வங்கதேசத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.

இந்த நிலையில், வங்கதேசத்தின் நரசிங்கி, ஷெர்பூர், சத்கிரா, குஷ்டியா மற்றும் காஷிம்பூர் ஆகிய ஐந்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியுள்ளதாக வங்கதேச பாதுகாப்பு அமைப்புகள் இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்துள்ளது.

நர்சிங்கி சிறையிலிருந்து தப்பியோடிய 400 கைதிகள் சரணடைந்துள்ளதாக வங்கதேச ராணுவ அதிகாரிகள் எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனாலும், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹெஃபாசாத்-இ-இஸ்லாம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பலரை இன்னும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வங்கதேச சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற பயங்கரவாதிகள் உட்பட 1,200 கைதிகள் ஆயுதங்களுடன் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்யலாம் என இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வங்கதேச பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதேபோல துன்புறுத்தலுக்கு பயந்து பதவிகளை விட்டு வெளியேறிய பல காவல்துறையினரும் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், “சிறையிலிருந்து ​​தப்பியோடிய குற்றவாளிகள் 4096 கிமீ நீளமுள்ள இந்திய வங்கதேச எல்லையை கடக்க முயற்சி செய்யலாம். இந்தியாவில் எல்லை பாதுகாப்புப் படை பாதுகாப்பினை அதிகரித்துள்ள போதிலும், எல்லை முழுவதும் வங்கதேச ராணுவத்தின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. அவர்கள் வங்கதேசத்தின் நகர்ப்புறங்களில் வன்முறை நடக்கும் இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே இந்திய எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்த சூழலில் புதன் மற்றும் வியாழன் கிழமைக்கு இடையே, வடக்கு மற்றும் தெற்கு வங்கதேச எல்லையில், வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற நான்கு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

x