கர்நாடகாவை மிரட்டும் டெங்கு: பெங்களூருவில் காவல் துறை அதிகாரி பலி


டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல் துறை அதிகாரி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் கர்நாடகாவில் டெங்குவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை டெங்குவால் 19,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள 10 மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிக்க சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் மாநிலத்தின் மாவட்ட ஆணையர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய அமைச்சர், மழை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதை குறைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

டெங்குவால் கர்நாடகாவில் நேற்று வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் 4 பேர், ஷிமோகாவில் 2 பேர், ஹாசனில் 2பேர், தார்வாட் மற்றும் ஹாவேரியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு நகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சிசிஆர்பி (சிட்டி க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) அதிகாரியாக பணியில் இருந்த சோமசேகர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பெங்களூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் கர்நாடகாவில் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

x