வயநாடு நிலச்சரிவு: நிதி திரட்டுவதற்காக 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடிய சிறுமி


வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்காக சிறுமி ஒருவர் 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதியை சேகரித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டியதால் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக அழிந்தன. அட்டமலை, புஞ்சிரி மட்டம், வெள்ளரிமலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்த பேரழிவு சம்பவத்தால் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் பலர் காணாமல் போன போனார்கள். அவர்களைத் தேடும் பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீஸார், தன்னார்வலர்கள், மருத்துவக் குழுவினர் என 11 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 413 பேர் பலியாகியள்ளனர். மேலும் மாயமான நூற்றுக்கும் அதிகமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுவதற்காக 13 வயது சிறுமி ஹரிணி தொடர்ந்து 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி வசூலித்துள்ளார். கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தனது சேமிப்புத் தொகை உட்பட ரூ.15 ஆயிரத்தை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ஹரிணி வழங்கினார். செல்போனில் பதிவு செய்யப்பட்ட தனது பரதநாட்டியத்தை முதலமைச்சரிடம் அவர் காட்டினார். அவருக்கு முதல்வர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அப்போது முதல்வர் கூறுகையில், " நிலச்சரிவை தேசிய பேரிடராகவும், கடுமையான பேரிடராகவும் அறிவிக்குமாறு கேரள அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. பேரிடரின் தீவிரத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஒன்பது பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. பேரிடரை சமாளிக்க மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. மாநில அரசுக்கு மத்திய அரசின் உதவியும், விரிவான மறுவாழ்வுத் தொகுப்பும் கிடைக்கும் என்றும், இது தொடர்பாக பிரதமர் மோடி முடிவெடுப்பார்" அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

x