வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்பு


டாக்கா: நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நேற்று பொறுப்பேற்றார். அவருடன் 16 உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு முறையை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சங்கங்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. கடந்த 2 மாதங்களாக நடந்த போராட்டத்தில் 300 பேர் இறந்தனர். இந்நிலையில் தலைநகர் டாக்காவில் லட்சக்கணக்கான மாணவர்கள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கும் நடவடிக்கையில் இறங்கிய ராணுவத் தளபதி வாக்கர் உஸ் ஜமான், அவாமி லீக் கட்சி தவிர்த்து பிற கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க வேண்டும் என மாணவர்கள் அமைப்பினர் விரும்பினார். இவர் ஒலிம்பிக் விளையாட்டை பார்வையிட பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றிருந்தார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு தலைமையேற்க அவர் நாடு திரும்பும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அவர் நேற்று நாடு திரும்பினார். துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று காலை டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்துக்கு முகமது யூனுஸ் வந்தார். அவரை ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான், மூத்த அதிகாரிகள், மாணவர் சங்கத் தலைவர்கள் உட்பட பலர் வரவேற்றனர். அவர் நேரடியாக பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான பங்காபாபனுக்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நேற்று இரவு 9 மணிக்கு பொறுப்பேற்றார். அவருக்கு அதிபர் முகமது ஷகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முகமது யூனுஸ் தலைமையிலான ஆலோசனை குழுவில் 16 உறுப்பினர்களும் பதவியேற்றனர். இதில் மாணவர் இயக்கத்தை வழி நடத்திய நகித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மகமது ஆகியோர் இடம்பெற்றனர். இந்த ஆலோசனைக் குழு தலைமையிலான இடைக்கால அரசு குறிப்பிட்ட காலத்துக்கு நாட்டை வழிநடத்தும். தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த இடைக்கால அரசு நீடிக்கும். இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் உட்பட சுமார் 400 பேர் பங்கேற்றனர். இதில் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை.

x