வக்ஃப் மசோதா சலசலப்பு முதல் புத்ததேவ் மறைவு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா அறிமுகம்: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள், மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். வக்ஃப் வாரியங்களில் பெண்களைக் கட்டாயமாகச் சேர்ப்பது உட்பட பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்துக்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

“மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” - வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மசோதா தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், “இந்த மசோதா கூட்டாட்சி முறை மீதான வலிமையான தாக்குதல். வக்ஃப் சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகளை மாநிலங்கள் கவனித்துக் கொள்கின்றன. இந்த மசோதா அனைத்து தரவுகள் சேகரிக்கும் பணியையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும். இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

“இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்ல, கூட்டாட்சி மற்றும் மத சிறுபான்மையினருக்கும் எதிரானது” என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஒரு இந்து கோயிலை நிர்வகிக்கும் வாரியத்தில் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அங்கம் வகிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒரு குறிப்பிட்ட மதத்தை நம்பாத ஒருவருக்கு அந்த மதத்தின் சார்பாக முடிவெடுக்க ஏன் உரிமை இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“ஒரு சொத்தை வக்ஃப் நிர்வகித்தல் என்பது முஸ்லிம்களுக்கு இன்றியமையாத மத நடைமுறையாகும். அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை மறுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தங்கள் வக்ஃப் சொத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது? அரசாங்கம் கடுமையாகக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி. அதற்கு இந்த மசோதா ஆதாரம்” என்று கடுமையாக அசாதுதீன் ஒவைசி எதிர்த்தார்.

கிரண் ரிஜுஜு விளக்கம்: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா குறித்து விளக்கம் அளித்த மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்த மசோதா மூலம், எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. யாருடைய உரிமையையும் இது பறிக்காது. உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் இந்த மசோதா இன்று கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பதை நிறுத்துங்கள். யார் எதிர்த்தாலும், யார் ஆதரித்தாலும் சரி இது வரலாற்றில் இடம்பெறும். மசோதாவை எதிர்க்கும் முன், ஆயிரக்கணக்கான ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி சிந்தித்து அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்" என வலியுறுத்தினார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு பாஜக கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 4-வது பதக்கம் ஆகும்.

தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்: தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயன் அடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆக.15-ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்: ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.

குருப்-2 ஏ பதவிகளுக்கு ஆக.14-ல் கலந்தாய்வு: குருப்-2 ஏ பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட கடும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் கோரிக்கை: வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அவரது நெருங்கிய உறவினரும், சிறு வயது பயிற்சியாளருமான மஹாவீர் போகத் வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக, தனது ஓய்வு முடிவை வினேஷ் போகத் அறிவித்தார். அவர், “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று தனது ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் வினேஷ் போகத்.

தொடர்ந்து 9-வது முறையாக மாறாத ரெப்போ விகிதம்: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்ட அவர், ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவித்தார். இதன்மூலம் 2023 பிப்ரவரி முதல் தொடர்ந்து 9-வது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் மறைவு: மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 80. மூத்த இடதுசாரி தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வியாழக்கிழமை காலை தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொலிட்பீரோவில் அங்கம் வகித்த புத்ததேவ் பட்டாச்சார்யா, 2000 முதல் 2011 வரை மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார். அதிக முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் ஜோதி பாசுவுக்குப் பிறகு முதல்வர் பதவிக்கு வந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “புத்ததேவ் பட்டாச்சார்யா உடன் பல தசாப்தங்களாக தொடர்பில் உள்ளேன். அவரின் இறப்புச் செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரின் மனைவி, மகன் மற்றும் சிபிஎம் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

x