வக்ஃப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு


புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவின் நகல் அவை உறுப்பினா்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டது. வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்த மசோதாவில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம்அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், போராஸ், அகாகனிஸ் ஆகிய பிரிவுகளுக்கென தனி சொத்து வாரியம் (அக்ஃப்) உருவாக்கப்பட்டு, அதில் ஷியா, சன்னி, போராஸ், அகாகனிஸ் மற்றும் பிற இதர பிற்படுத்த முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய வலைதளம் மற்றும் தரவுத்தளம் மூலமாக வக்ஃப் வாரிய சொத்துகள் பதிவை முறைப்படுத்தி, வெளிப்படுத்தன்மையைக் கொண்டுவருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ எனப்படுகின்றன. இவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு, முஸ்லிம்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல் மற்றும் தர்கா பராமரிப்பு, கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கும் செலவிடப்பட்டு வருகிறது.

இந்த சொத்துகளை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன்கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த வக்ஃப் வாரியங்களை கண்காணிக்க, வக்ஃப் சட்டத்தின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, கடந்த 2013-ம் ஆண்டு இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, வக்ஃப் வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதிலும் மொத்தம் 7,85,934 சொத்துகள் முஸ்லிம் வக்ஃப்களுக்கு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கடந்த 2022-ல் தெரிவிக்கப்பட்டது. நாட்டிலேயே அதிகமாக 2,14,707 சொத்துக்கள் உ.பி. வக்ஃப் வாரியத்திடம் உள்ளன. இவற்றில் உ.பி.யில்மட்டும் ஷியா பிரிவுக்கு தனியாக உள்ள வக்ஃப்க்கு 15,006 சொத்துகளும் உள்ளன.

மற்ற மாநிலங்களில் உள்ள சன்னி முஸ்லிம் பிரிவின் வக்ஃப் வாரியங்களின் நிர்வாகத்தில் ஷியா முஸ்லிம் ஒருவர் கட்டாய உறுப்பினராக செயல்படுகிறார். உ.பி.யை தொடர்ந்து மேற்கு வங்க வக்ஃப்க்கு 80,480 சொத்துகள்உள்ளன. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திடம் 60,223 சொத்துகள் உள்ளன.

x